சென்னை: ‘பாட்டல் ராதா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தனது பேச்சில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது மற்றும் இளையராஜாவை ஒருமையில் பேசியது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் மேடையில் மன்னிப்பு கேட்டார்.
நிகழ்வில் பேசிய மிஷ்கின், “பாடலாசிரியர் தாமரை என்னை விமர்சித்துப் பேசியிருந்தார். அவரிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்கிறேன். அந்த விமர்சனத்தில், வெற்றி என்னை இப்படி பேச வைத்துவிட்டது என சொல்லியிருந்தார். 18 ஆண்டுகளாகவருடமாக போராடிக்கொண்டே இருக்கிறேன் சகோதரி தாமரை அவர்களே!. தினமும் 10 நிமிடம் உன் மரணத்தை பற்றி தியானி என பௌத்தம் சொல்வது போல் நான் தினமும் தியானித்துக் கொண்டிருக்கிறேன்.
வெற்றி என் தலைமேல் இருந்திருந்தால் இந்நேரம் நான் பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படம் செய்திருக்க வேண்டும். அடுத்தது எனக்கு மிகப்பிடித்த, மிகச்சிறந்த ஆளுமை லெனின் பாரதி. அவரும் என்னை தத்துவ ரீதியான விமர்சித்திருந்தார். அவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் அருள்தாஸ் என்னை விமர்சித்திருந்தார். எனக்கு அவரையும் பிடிக்கும். அவரது முகத்தில் அத்தனை கருணை இருக்கும். அவருடன் நான் நீண்ட நாட்களாக வேலை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். கடந்த 3 நாட்களாக அவர் என்னை திட்டி திட்டி மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரிடமும் என்னுடைய மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வைத்து படம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தாணுவிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அது போல் யாரோ ஒருவர் என் மீது செருப்பு எறிய வேண்டும் என கூறியிருந்தார்.
அமீரிடமும் வெற்றிமாறனிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முகம் சுழிக்கும் வகையில் பேசியதற்கு அவர்களிருவரும் சிரித்தார்கள் என அதிகமானோர் அவர்களைத் திட்டியிருந்தார்கள். ஒரு நகைச்சுவை சொல்லும்போது அதை எடுத்துக் கொள்கிறவர்கள், அவர்களது ஆழ் மனதில் இருந்துதான் சிரிக்கிறார்கள். அந்த நிகழ்வில் நான் பேசும்போது எல்லோரும் சிரித்தார்கள். பத்திரிக்கையாளர்கள் பலரும் சிரித்தார்கள்.
நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அதில் ஓரிரு வார்த்தைகள் எல்லைமீறி சென்றுவிட்டது. குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை, அந்த எண்ணமும் எனக்கு இல்லை. விஷாலும் நானும் சண்டைபோடும்போதும், ஒருவார்த்தை கூட மோசமான வசை வார்த்தைகள் நான் பேசவில்லை. நான் சொன்ன ஒரே வார்த்தை பொறுக்கி என்பது மட்டும்தான்.
#Mysskin apologizes for his abusive speech on #BottleRadha pic.twitter.com/R8yLtAg1zZ
— Lavyyy Boiiii ✨ (@Lavyyboi) January 26, 2025
மேடையில் பேசுவதற்கு நாகரீகம் வேண்டும் என்கிறார்கள். அது அரசியல் மேடை அல்ல. கூத்து செய்யும் கலைஞர்களின் மேடை. கிராமங்களில் நடக்கும் கூத்தில் சில வார்த்தைகளை நா கூசும் அளவிற்குதான் பேசுவார்கள். அது ஒருவிதமான வெளிப்பாடு, அது ஒரு வகையான நகைச்சுவை. அதுபோல்தான் நானும் பேசினேன். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
ஒரு படம் என்னை பாதித்தது, அதன் தாக்கத்தில் என் ஆழ்மனதில் இருந்துதான் பேசினேன். அப்படி பேசியது உங்களை பாதித்துள்ளது.
மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 500 பேர் எனக்கு போன் செய்தார்கள். அதிகமான பெண்கள் போன் செய்தார்கள். பத்திரமாக இரு என்றார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற தலைப்பில் ஒரு படம் வந்தது. அது பற்றி யாரும் விமர்சிக்கவில்லை.
என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் என் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், இல்லையென்றால் வெற்றி மாறனிடம் கேளுங்கள் என பேசியிருந்தார். ஆனால் கடந்த மூன்று நாட்களாக டிவி, செல்போன் எல்லாவற்றிலும் என்னை பற்றிதான் செய்திகள் இடம்பெற்றன.
நான் ஆபாசமாக எடுக்கின்றேன் என சொல்கிறீர்கள். பிசாசு 2ல் ஆண்ட்ரியாவிடம் கதை சொல்லும்போது, நிர்வாணக் காட்சிகள் தேவை என சொன்னேன். ஆண்ட்ரியாவும் கதையைக் கேட்டு நடிக்கிறேன் என்று சொன்னார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கினோம். பின், அவரைத் தொலைப்பேசியில் அழைத்து அந்த காட்சிகளால் நான் பெயர் வாங்கலாம், ஆனால், அதைப் பார்க்கும் இளைஞர்கள் நான் பார்க்கும் பார்வையில் பார்க்க மாட்டார்கள். அதனால் வேண்டாம் என சொல்லிவிட்டேன்.
இதையும் படிங்க: குடியரசு தினத்தில் மறக்காமல் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
அந்த காட்சியை எடுத்து நான் போஸ்டர்களில் போட்டிருந்தால் இந்நேரம் அந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கும். இரண்டரை வருடங்களாக அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படம் வெளியாகியிருந்தால் ஆண்ட்ரியாவிற்கு சர்வதேச விருதுகள் கிடைத்திருக்கும். அந்தப் படத்தினைப் பார்த்த வெற்றிமாறன், இந்த இரவு முழுவதும் என்னால் பேச முடியாது நான் காலையில் பேசுகிறேன் மிஷ்கின் என்றார். நான் கமல், ரஜினிக்கு படம் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை ஏனென்றால் நான் சினிமாவை நேசிக்கிறேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் எடுத்தேன். அத்திரைப்படத்தை முதல்நாளில் ரிலீஸாக விடவில்லை. மறுநாள் இரவுதான் அத்திரைப்படம் ரிலீஸானது. 10 நாட்களுக்குப் பிறகு அதன் தொலைக்காட்சி உரிமையை வாங்க வந்தார்கள். அப்போது எனக்கு நெருக்கமான மனிதர், அவர் மிகப்பெரிய இயக்குநர், உனக்கு நிறைய பணம் வாங்கித் தருகிறேன் என என்னை அழைத்துச் சென்றார்.
பெரிய அறையில் என்னை 20 தடியர்களை வைத்து 75 லட்ச ரூபாய்க்கு படத்தின் உரிமையை கொடுக்கச் சொல்லி மிரட்டினார்கள். நான், நல்ல படம் 2 கோடி கொடுங்கள் என கேட்டேன். ஆனால், என்னை மிரட்டி கையெழுத்துபோட வைத்து ரூ.75 லட்சம் கொடுத்தார்கள். அந்த திரைப்படத்தினை அந்த சேனலில் இதுவரை 80 தடவை ஒளிபரப்பியிருப்பார்கள்.
அந்த செக்கை அவர்கள் முன் கிழித்துப்போட்டுவிட்டு, நான் கஷ்டப்பட்டு மீண்டு வருவேன் என சொன்னேன். அதே மாதிரி மீண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு தருணமும் நான் துரோகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன். நான் அந்த படத்திற்கு கவனத்தை ஈர்க்கவே அப்படி பேசினேன். அவ்வளவு மனிதர்களை நான் நேசிக்க வேண்டியுள்ளது. மன்னிப்பு கேட்க நான் என்றுமே தயங்கியதே இல்லை.
உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் அதில் வரும் மோசமானவன் ஊர் மக்களைப் பார்த்து எனக்கு ரொம்ப வருத்தம், இவ்வளவு நாள் நான் கெட்டவனாக இருந்தேன் இப்பொது உங்களையெல்லாம் கெட்டவர்களாக்கி விட்டேன் என சொல்வார். நண்பர்களே உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு உங்களையெல்லாம் நான் கடவுளாக்குகின்றேன்” என பேசினார்.