இருசக்கர வாகனத்தில் மோதி ஆட்டோ கவிழ்ந்தது: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதி ஆட்சியர் அலுவலகம் முன்பு இருசக்கர வாகனத்தில் மோதி ஆட்டோ கவிழ்ந்த சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு பகுதியை அழகுபடுத்தும் விதமாக அங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பிரமாண்டமான துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் வரும் வாகனங்கள் அந்த ரவுண்டானா அருகாமையில் நின்று ஆட்களை இறக்கி விட்ட பின்பு வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்லும். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த ரவுண்டானாவை சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாகவும் செல்வது வழக்கம்.
இந்நிலையில் ரவுண்டானாவின் வழியாக ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த நிவேதன், அவரது மனைவி பவித்ரா, மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த ஆட்டோவை ஐயம்பெருமாள் என்பவர் ஓட்டிவந்து உள்ளார். இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் என மொத்தம் நான்கு பேரும் காயமடைந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியில் நின்றவர்கள் நாண்கு நபரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.