சென்னை : தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு போலியாக என்ஆர்ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்த ஆறு மாணவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
போலி தூதரக சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் (என்ஆர்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. அந்த இடங்கள், வரும் 25ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகின்றன. எந்த விதமான முறைகேடுகளும் அதில் நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க : "போதை கலச்சாரத்தால் ஏற்படும் பாலியல் பலாத்காரங்கள் வேதனையளிக்கிறது" - முன்னாள் நீதிபதி கிருபாகரன் வருத்தம்!
அதில், மூன்று பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர். இதையடுத்து ஆறு பேரும் மருத்துவக் கலந்தாய்வில் இனி பங்கேற்பதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்களில் மூவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அந்த இடங்கள், வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ள சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வில் காலியிடங்களாக சேர்க்கப்படும். போலிச் சான்றிதழ் அளித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்