சென்னை: தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆர்.தாமரைசெல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பென்னாகரம், கரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், குவாரி குத்தகை வழங்குவதற்காக மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையிலும், மாநில அரசுகளுடன் ஆலோசித்தும், வழிமுறைகளை மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில், கனிமவள மேம்பாட்டு சட்டத்தின்படி, இந்த வழிமுறைகளை உத்தரவாக கருத வேண்டும் எனவும் மாநிலங்கள், இதை பின்பற்ற வேண்டும்.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னே, குத்தகை வழங்க முடியும் என்ற நிலையில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆகையால், டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதித்து, டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்..
ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் எனவும், ஆனால் இறுதி செய்யப்படும் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கக்கூடாது என கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய விதிகளை பின்பற்றியே டெண்டர் விடப்பட்டதாகவும் எந்த விதிமீறலும் இல்லை எனவு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முறையாக ஆய்வு நடத்தாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுதாரருக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்