சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 471 நாட்களுக்குப் பின், அமர்வு நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த தடையும் இல்லை, விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் முதன்மை நீதிமன்றத்தில் இதுவரை 2 முறை நேரில் ஆஜராகி, செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்..
அமலாக்கத்துறை தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்ற செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க, தடய அறிவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குனர் மணிவண்ணன் ஆஜரானார். அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சி.ஆர்.மலர்வண்ணன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இவ்வாறு நடைபெற்ற குறுக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குனர் மணிவண்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-11-2024/22959033_etvwc.jpg)
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்