ஆம்பூரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது - அசால்ட்டாக உலா வரும் சிசிடிவி காட்சிகள்! - CCTV videos
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், உமராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு புகார்கள் வந்துள்ளது. இதனால் தொடர்ந்து இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களைப் பிடிக்க ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், ஆம்பூர் மற்றும் உமராபாத் பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆம்பூர் புறவழிச் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை தனிப்படை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், பிடிபட்டவர்கள் பேர்ணாம்பட்டையைச் சேர்ந்த குமார் மற்றும் அலீம் என்பதும், இவர்கள் இருவரும் ஆம்பூர் மற்றும் உமராபாத் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனக் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர் இருவரையும் கைது செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 17 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, இருவரும் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.