10 ஆண்டுக்கு முன்பு சீல் வைக்கப்பட்ட மதுபான ஆலை.. ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி குடிக்கும் மதுபிரியர்கள்! - sealed liquor factory
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான ரைஸ் மில் வளாகத்திற்குள் சட்ட விரோதமாக மதுபானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். சட்ட விரோதமாக மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்ததை அறிந்த கலால் துறை காவல் துறையினர், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்தக் குடோனில் இருந்த மதுபான பாட்டில்களை, இரண்டு லாரிகள் மூலம் பறிமுதல் செய்து தொழிற்சாலைக்குச் சீல் வைத்து மூடினர்.
இந்நிலையில் அந்த குடோனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிதறிய பாட்டில்களை முறையாகப் பறிமுதல் செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றதால், அப்பகுதி சேர்ந்த குடிமகன்கள் கடந்த 10 ஆண்டுகளாக நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் குடோனின் மேல் ஏறி ஓட்டை பிரித்து கீழே இறங்கி, சிதறிய மது பாட்டில்களைக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து குடித்தும், மது பாட்டில்களைத் திருடி வீட்டுக்கு எடுத்துச் சென்று குடித்தும் வந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் நேற்று இரவு மதுபான தொழிற்சாலை கிடங்குக்குள்ளே இறங்கி, மதுவைக் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதிக போதையில் வீடு திரும்பிய அவர், தன்னைத்தானே கழுத்தில் கத்தி வைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர், இது சம்பந்தமாகத் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா மற்றும் கலால் போலீசார் சீல் வைத்து மூடப்பட்ட மதுபான கிடங்கை மீண்டும் திறந்து சிதறி கிடந்த காலாவதியான சுமார் 200க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை அங்கிருந்து பறிமுதல் செய்து உடைத்து அழித்தனர்.