தள்ளாடும் வயதிலும் தன்னம்பிக்கையோடு உழைக்கும் தம்பதியர் - நெகிழ வைக்கும் சம்பவம்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: மாயங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியர் கிருஷ்ணன் (83) மற்றும் சின்ன குழந்தை (78). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். விவசாய கூலி வேலை செய்து வரும் மகன் மற்றும் மகள்களை நம்பியில்லாமல், இருவரும் தள்ளாடும் வயதிலும் தன்னம்பிக்கையோடு கீரை விற்று அதில் வரும் பணத்தின் மூலம் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
கிருஷ்ணன் - சின்ன குழந்தை தம்பதி வேறு ஒரு விவசாய நிலத்தில் இருந்து வாங்கி அறுவடை செய்து கீரைகளை சைக்கிள் கட்டிக் கொண்டு மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு 6 முதல் 7 கிலோமீட்டர் தாண்டியும் சைக்கிளில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். கிருஷ்ணனுக்கு உதவியாக அவரது மனைவியான சின்ன குழந்தையும் அவருடன் சென்று கீரைகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தின் மூலம் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இளைஞர்கள் பலர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என ஊரை சுற்றி வருவதும், சிலர் கிடைத்த வேலையில் நாட்டமில்லாமல் இருப்பதும் நம்மால் காண முடிகிறது. ஆனால் 70 வயது தாண்டியும் கணவனுக்கு மனைவி துணையாகவும், மனைவிக்கு கணவன் துணையாகவும் விவசாய நிலையத்திலிருந்து கீரைகளை அறுவடை செய்து சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று விற்பனை செய்யும் தம்பதியரை காணும் பொழுது உழைக்கும் எண்ணத்தினை இளைஞர்களுக்கு விதையாய் விதைப்பதாகப் பொதுமக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.