விழுப்புரம்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சிக் கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த விஜய், கட்சியின் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார்.
தவெக மாநாடு: கட்சியின் சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மாநாட்டு பணிகள்: அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 4ஆம் தேதி மாநாட்டு பணிகள் தொடங்கி மாநாட்டிற்கான பந்தல், மேடை, விளக்குகள் அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் கட் அவுட்களுடன் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி தவெக மாநாடு: கட்-அவுட் முதல் 100 அடி கொடி வரை.. சிறப்பு ஏற்பாடுகள் குறித்த அப்டேட்
குதிரை வண்டியில் செல்லும் தொண்டர்கள்: திருநெல்வேலியில் இருந்து நெல்லை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் புல்லட் ராஜா தலைமையில், குதிரை வண்டியில் தவெக தொண்டர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கேடிசி நகர் பகுதியில் சிறப்பு பூஜை செய்து, தங்களது பயணத்தை துவக்கினர்.
100 பேருந்துகள், 40 கார்கள்: அதேபோல், சென்னை அம்பத்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் G.பாலமுருகன் தலைமையில் 100 பேருந்துகள் மற்றும் 40 கார்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு செல்ல உள்ளனர். அதில் இரண்டு சொகுசு பேருந்துகளில் தவெக மாநாட்டிற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தல ரசிகன் தளபதி தொண்டன்: மேலும், மாநாடு நடக்கும் விக்கிரவாண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர் விஜயும், அஜித்தும் அருகே நிற்பது போல பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் 'தல ரசிகன் தளபதி தொண்டன்' அனைவரும் திரண்டு வாரீர் என எழுதப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்