தேனி: தேனி மாவட்டம் போடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஓர் தனியார் தங்கும் விடுதியில் பிப்ரவரி 13ஆம் தேதி ராஜா (வயது 68) என்பவர் அறை எண் 101 -இல் தங்கி இருந்துள்ளார். இவர் முந்தல் வடக்கு மலைப் பகுதியில் உள்ள தனது ஏலத்தோட்ட பராமரிப்பு பணிக்காக கோயம்புத்தூரில் இருந்து தேனிக்கு வந்து தங்கியுள்ளார்.
இவர் பூர்வீகம் போடி என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஏலத்தோட்ட வேலை நடந்து வருவதால், அதனைப் பார்வையிடுவதற்காகத் தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது நேற்றிரவு (பிப்.15) சுமார் ஒன்பது மணி அளவில் ராஜா உணவு வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்று கதவைப் பூட்டியுள்ளார்.
பின், அதிகாலையில் அவருடைய தோட்டத்து மேலாளர் வந்து கதவை நீண்ட நேரமாகத் தட்டிய நிலையில் அவர் கதவைத் திறக்காததால், விடுதி மேற்பார்வையாளரும், தோட்டத்து மேலாளரும் இணைந்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போடி நகர் காவல் துறையினர் கதவினை உடைத்துப் பார்த்தபோது உணவு அருந்திய நிலையில் ராஜா சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைதுள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை இரட்டை கொலை: சாராய வியாபாரத்தைத் தட்டிக்கேட்ட இளைஞர்களை சாய்த்த கும்பல்!
இதனைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் அதனை பிரேதப் பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போடி காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் தங்கும் விடுதியில் கதவு பூட்டப்பட்ட நிலையில் முதியவர் சடலமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.