“யாரும் பாக்கல.. அள்ளிப்போடு” - ஜவுளி கடையில் கைவரிசை காட்டிய 3 பெண்கள் கைது! - THEFT AT A TEXTILE SHOP
🎬 Watch Now: Feature Video
Published : Oct 25, 2024, 1:28 PM IST
ஈரோடு: தீபாவளி பண்டிகை வருகிற 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஈரோட்டு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் உட்பட கடை வீதிகளில் புத்தாடை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜவுளி வளாகத்தில் செல்வராஜ் என்பவரது கடைக்கு வந்த மூன்று பெண்கள், துணி வாங்க வந்ததைப் போல் நடித்து ஜவுளி பண்டலை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் கடையின் உரிமையாளர், கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிக்கு விற்பனையான ஜவுளியுடன் கணக்கிடும் போது ஜவுளி குறைந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த உரிமையாளர், வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளார். இதில், கடைக்கு வந்த 3 பெண்கள் ஜவுளி கட்டுக்களை கட்டைப் பையில் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, செல்வராஜ் ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். இதில், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பவித்ரா, கோகிலா, சுசீலா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 15 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.