சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது வசீகரிக்கும் கணீர் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார்.
அநீதி, போர், ரசவாதி என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வருகிறார். நாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் அசத்தி வரும் இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளார்.
![நடிகர் அர்ஜூன் தாஸ் அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-10-2024/tn-che-01-arjun-doss-statement-script-7205221_26102024085149_2610f_1729912909_619.jpg)
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இணைந்தது குறித்து அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா கனவுகளுடன் சென்னை வந்த எனக்கு எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. அப்போது சுரேஷ் சந்திரா அவரது டி ஒன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுத்தார். வாய்ப்புக்காக இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை சந்திக்க அது ஒரு சிறந்த வழியாக அமைந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் நடிகர் அஜித்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அஜித் சாரை படப்பிடிப்பு தளங்களில் பார்க்க செல்வது முதல் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் உடன் இருப்பது, அவரது படங்களின் விளம்பரங்களில் ஈடுபடுவது, மார்க்கெட்டிங் செய்வது அவர் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு பற்றி அறிய முதல் நாளே திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது வரை அனைத்தும் நேற்று நடந்தது போல் உணர்கிறேன்.
நம்பினால் நம்புங்கள் வீரம் படத்தின் டீஸரை ஆன்லைனின் பதிவேற்றியது நான்தான். அஜித் சாரின் கருணையும் பெருந்தன்மையும் தான் இவ்வளவு நாட்களாக மாறாமல் உள்ளது. நான் மாஸ்டர் படம் நடித்த பின்னர் என்னை அழைத்து "அர்ஜுன் விரைவில் நாம் ஒன்றாக வேலை செய்வோம்" என்றார். அவ்வாறு கூறியது தற்போதும் நினைவிருக்கிறது.
அந்த நிகழ்வு தற்போது உண்மையாக நடந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அவருடன் திரையை பகிர்ந்து கொண்டது கனவு நனவானது போல் உள்ளது. அவர் அலுவலகத்தில் வேலை செய்வது முதல் அவருடன் நடிப்பது வரை வாழ்க்கை முழுமை அடைந்துவிட்டது போல் உணர்கிறேன்.
'அஜித்துடன் எப்போது படம் பண்ணுவீங்க' என்று என்னை எப்போதும் கேட்கும் ரசிகர்களுக்கு இதுதான் பதில் என்று நினைக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. இந்த படத்துக்காக என்னை முழுவதுமாக அர்ப்பணிப்பேன். தயாரிப்பாளருக்கு நன்றி, அஜித் சார் இது உங்களுக்காக உங்களால் தான். விரைவில் திரையரங்குகளில் சந்திக்கலாம்” என்று அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.