4 ஆண்டுகள் நிறைவு- ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு கௌரவம்! - சரக்கு சேவை வரி
ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி வெற்றியில் பங்களிக்கும் வரி செலுத்தியவர்களை கௌரவிக்க மத்திய மறைமுக வரி வாரியம் (சிபிஐசி) முடிவெடுத்துள்ளது.
டெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வரி சீர்திருத்தம் காரணமாக பல வரிகள் நீக்கப்பட்டன.
வரி செலுத்தும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. இந்நிலையில், வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவை ஜிஎஸ்டி வரி வருவாய் வேகமாக அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
4 ஆண்டுகள் நிறைவு
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து, கடந்த 8 மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் (ஜூலை1) 4 ஆண்டுகள் நிறைவடைவதால், ஜிஎஸ்டி வெற்றிக்கு ஒரு பகுதி காரணமாக இருந்த வரி செலுத்துவோரை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜிஎஸ்டி வரி செலுத்தியதில் கணிசமாக பங்களிப்பு அளித்தவர்கள் மற்றும் சரியான நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்தவர்களை அடையாளம் காண தரவு பகுப்பாய்வு ஒன்றை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நடத்தியது.
தமிழ்நாட்டு பங்களிப்பாளர்களுக்கு கௌரவம்
இதன்படி 54 ஆயிரத்து 439 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 88 சதவீதம் பேர் குறு, சிறு, நடுத்தர தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆவார்கள். இதில், தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 589 பேரும், புதுச்சேரியில் 47 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக அடையாளம் காணப்பட்டவர்களின் விவரம் மத்திய அரசின் ஜிஎஸ்டி தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வரி விலக்கு தொடர்பான கேள்விக்கு பதில் இல்லை- பிடிஆர்