மதுரை: பனிப்பொழிவு மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், சோழவந்தான், சத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, வலையங்குளம், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மேலும், அண்டை மாவட்டங்களான சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் டன் கணக்கில் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இப்பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு தனித்துவமான மணம், தரம், தன்மை காரணமாக வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் மதுரையிலிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. மதுரை மல்லிகையின் தனித்தன்மையின் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், மதுரை மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மலர்ச்சந்தையில் இன்றைய விலை நிலவரத்தை பொருத்தவரை, மெட்ராஸ் மல்லி ரூ.1000, பிச்சி ரூ.1,300, முல்லை ரூ.1,200, செவ்வந்தி ரூ.160, சம்பங்கி ரூ.280, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.450, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மல்லிகை செடியில் கொத்து கொத்தா பூ பூக்கணுமா? வாரத்திற்கு ஒருமுறை 'இதை' ஸ்ப்ரே பண்ணுங்க!
இது குறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், "கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அனைத்து பூக்களின் வரத்தும் குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் விலையில் கடும் ஏற்றம் காணப்படுகிறது. இருப்பினும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இந்த விலை நிலவரம் அடுத்த ஓரிரண்டு நாட்களுக்கு நீடிக்கும்," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேனி மலர் சந்தையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.1,200 க்கு ஏலம் போன மல்லிகை பூ, நேற்று (டிசம்பர் 31) செவ்வாய்க்கிழமை கிலோ 3 ஆயிரத்து 200 வரை ஏலம் போயுள்ளது. ஒரு கிலோ ரூ.700 முதல் 800 வரை ஏலம் போன கனகாம்பரம் மற்றும் முல்லை பூ, ஒரு கிலோ ரூ.1,500க்கு ஏலம் போயுள்ளது.
ஒரு கிலோ ரூ.600க்கு ஏலம் போன பிச்சி பூ ரூ.1,200க்கு, அரளி, சம்பங்கி ஆகிய பூக்கள் ஒரு கிலோ ரூ. 400க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.250க்கும், பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.220 க்கும், செண்டு பூ ஒரு கிலோ ரூ.100 க்கும், கோழி கொண்டை ஒரு கிலோ ரூ.80 என பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்த போதிலும், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.