கோவிட் -19: உயிரிழப்பில் நீடிக்கும் குழப்பங்கள்... புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை! - Trucks ferry bodies of COVID patients
நாட்டின் மூன்று மாநிலங்களில் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் கரோனா காரணமாக உயிரிழந்தோர் தகனம் செய்யப்படும் இடங்களில் அதிகாரப்பூர்வமாக தரப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து ஒரு பார்வை
ஹைதராபாத்: கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 24 மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் தொற்றின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு குறித்த விவரங்கள் ஒவ்வொரு நாளும் புதிய சாதனையை உருவாக்குகின்றன. கடந்த 24 மணி நேரத்துக்கு முன்பு வரை நாடு முழுவதும் 2,17,353 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கரோனா தொற்று காரணமாக இதே காலகட்டத்தில் 1185 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கரோனா தொற்று பாதிப்புகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை குறித்து ஏற்கனவே விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து ஈடிவி பாரத் , கள நிலவரத்தின் உதவியுடன் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.
இது கேள்விகளை எழுப்புகிறது. நாட்டின் மூன்று மாநிலங்களில் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் கரோனா காரணமாக உயிரிழந்தோர் தகனம் செய்யப்படும் இடங்களில் அதிகாரப்பூர்வமாக தரப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை முதலில் பார்க்கலாம்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று காரணமாக 10,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் சராசரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதே விகிதத்தில் வெளியாகிறது. ஆனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி தரப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தின் படி கரோனா காரணமாக 47 பேர் மாநிலம் முழுவதும் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில் போபாலில் உள்ள ஒரு தகன மையத்தில் 53 உடல்களுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளன
அதே போல சிந்த்வாரா என்ற பகுதியில் 37 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. போபால் மற்றும் சிந்த்வாரா இரண்டும் சேர்த்து 74 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அதே நாளில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் குறித்து அதிகாரப்பூர்வமாக தரப்பட்ட புள்ளிவிவரத்தை விட அதிகமாகும் இந்த இரண்டு இடங்களில் தகனம் செய்யப்பட்டோரின் விவரங்களைத் தவிர வேறு எந்த தகவல்களையும் நாங்கள் கொடுக்கவில்லை.
டெல்லி
தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்கு முன்பு புதிதாக 16,699 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 112 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 54,309 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து அரசு கொடுத்த புள்ளி விவரம் மற்றும் தகன மையங்களில் கொடுக்கப்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கேள்விகளை எழுப்புகின்றன. டெல்லியில் ஏப்ரல் 12ம் தேதி தரப்பட்ட புள்ளி விவரத்தின் படி தெற்கு டெல்லி மாநகராட்சியின் கீழ் உள்ள தகன மையங்களில் 43 உடல்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. புதுடெல்லி மாநகராட்சி உள்ள தகன மையங்களில் 40 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இதன் படி பார்த்தால், இரண்டு மாநகராட்சிகளின் கீழ் 83 பேர் உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. ஆனால், ஏப்ரல் 12ம் தேதி நிலவரம் குறித்து அரசு கொடுத்த புள்ளிவிவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 மட்டும் தான் என கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்
இந்த மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்துக்கு முன்பு 15,256 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. 24 மணி நேரத்தில் மொத்தம் 104 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி, மத்திய பிரதேச மாநிலங்களைப் போல சத்தீஸ்கரிலும் கூட உயிரிழந்தோர் குறித்து அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட தகவல் கேள்வியை எழுப்பி இருக்கிறது.
சத்தீஸ்கரின் துர்க் நகரில் கரோனா தொற்று அதன் கொடூரமான கரங்களை பரப்பும் விகிதம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. துர்க் நகரில் மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏப்ரல் 13ம் தேதி அங்கு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி துர்க் நகரில் உள்ள ஒரு தகன மையத்தில் மொத்தம் 61 உடல்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படுள்ளது. ஆனால், இங்கே அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கரோனா உயிரிழப்பு விகித்தில் ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இதில் கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான்
இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வாயிலாக இந்த கட்டுரையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், சத்தீஸ்கரை மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு அது குறித்து நாம் விளக்கமாக பார்க்கலாம். சத்தீஸ்கர் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் உள்ளன. அரசின் புள்ளி விவரப்படி ஏப்ரல் 13ம் தேதி கரோனா தொற்று காரணமாக 73 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டிருக்கிறது. துர்க் நகரில் உள்ள ஒரே ஒரு தகன மையத்தில் மட்டும் 61 பேர் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
வேறு விதமான நோய்கள், விபத்துகள், இயற்கையான காரணிகள் காரணமாக மரணம் ஏற்படலாம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் அல்லது வேறு நகரங்களில் கரோனா தொற்றால் மட்டும் உயிரிழந்தோரின் உடல்கள் மட்டும் தான எரிக்கப்பட்டது என்று சொல்வது தவறாக இருக்கும். .
ஆனால், 24 மணி நேரத்துக்கு ஒருமுறை வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்களில் உள்ள நகரங்களில் இருந்து கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து வரும் செய்திகள், அரசின் புள்ளி விவரங்களை சந்தேகத்துக்கு உள்ளாக்குகின்றன. அதே போல, ஏப்ரல் 12ம் தேதியன்று டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து அந்த மாநிலங்கள் கொடுத்த புள்ளி விவரங்களும் இதே போன்ற கேள்விகள் எழுப்புவதாக உள்ளன. .
தவிர ஈடிவி பாரத் அதில் சில கேள்விகளை எழுப்புகிறது.
தகனம் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை க்கு இடையே உள்ள வித்தியாசம் அரசின் புள்ளிவிவரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. ஈடிவி எழுப்பும் இந்த கேள்விகளுக்கு மத்திய , மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.
அந்த கேள்விகள் இவைதான்;
- உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் வித்தியாசங்கள் ஏன்?
- உயிரிழந்தோரின் எண்ணிக்கை பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறதா?
- தகன மையங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதில் அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு குறைபாடு இருக்கிறதா?
2020ம் ஆண்டை காட்டிலும் கரோனா தொற்றின் இப்போதைய அலை வேகமாக இருக்கிறது என மக்கள் மத்தியில் மோசமான அச்சம் உருவாக்கி இருக்கிறது. எனவே, இந்த கேள்விகள் குறித்து அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க: டெல்லியில் கரோனா தொற்றை துஷ்பிரயோகம் செய்யும் கைதிகள்!