சென்னை: சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 8.57 கோடி ) வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம், எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு விழாவை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழின் தொன்மை தொடர்பான தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கும் முப்பெரும் அறிவிப்புகளை #DiscoveryOfIndusCivilisationCentenary பன்னாட்டுக் கருத்தரங்கில் வெளியிட்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) January 5, 2025
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும்!… pic.twitter.com/cvdN78aVmF
இதில், சிந்துவெளி வரிவடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும் - ஒரு வடிவவியல் ஆய்வு நூலினை வெளியிட்டார். தொடர்ந்து, சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
#Live: சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவுக் கருத்தரங்கில் விழாப் பேருரைhttps://t.co/m9CFXtpPU7
— M.K.Stalin (@mkstalin) January 5, 2025
பின்னர் மேடையில் முதலமைச்சர் பேசியதாவது, “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின், அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் வெளியிட்ட 3 அறிவிப்புகள்:
சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: 'பயம் வந்துவிட்டது'.. முதல்வர் நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா பறிமுதல்.. அண்ணாமலை ஆவேசம்!
ஒரு மில்லியன் டாலர் பரிசு:
அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்.
அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வறிக்கை:
சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில், தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும்.
விருதுகள்:
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.