54 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா! - Dindigul Theppa thiruvizha - DINDIGUL THEPPA THIRUVIZHA
Published : May 23, 2024, 11:16 AM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயில். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோயிலில் பண்டைய காலத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அன்னியர் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் தெப்பத் திருவிழா நடைபெறுவது தடை பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, கடைசியாக இக்கோயிலில் கடந்த 1970ஆம் ஆண்டு தெப்பத் திருவிழாவை நடத்தியுள்ளனர். அதன்பிறகு நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாண்டு தெப்பத் திருவிழாவை நடத்தை முடிவு செய்த கோயில் அறங்காவலர்கள் குழு, அதற்கான ஒப்புதலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, வைகாசி விசாகமான நேற்று (மே 22) மாலை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் அபிராமி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தெப்பத் திருவிழாவின் போது, சிறிதளவில் மழை பெய்தது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவைக் கண்டு ரசித்தனர்.