நடுரோட்டில் தூக்குவாளி சாப்பாட்டை திறந்து போராட்டம்.. சாத்தான்குளம் அருகே தனியார் பேருந்து சிறைபிடிப்பு! - Thoothukudi Private bus issue - THOOTHUKUDI PRIVATE BUS ISSUE
Published : Aug 3, 2024, 6:42 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு பேய்குளம் வழியாக தனியார் பேருந்து ஒன்று காலையும், மாலையும் இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த பேருந்து கடந்த சில மாதங்களாக தேர்க்கன்குளம் ஊருக்குள் வராமல் செல்வதாகக் கூறி, தேர்க்கன்குளம் ஊர்மக்கள் தனியார் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காலம் காலமாக எங்கள் ஊர் வழி செல்லும் பேருந்து ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை எனவும், இவ்வாறு பேருந்து உள்ளே வரவில்லை என்றால் பேருந்து இந்த இடத்தை விட்டு நகராது. இந்த பேருந்தை நம்பி தான் தேர்க்கன்குளம், வசவப்பநேறி, மிரான்குளம், வெட்ட குளம் மக்கள் தூத்துக்குடி மற்றும் வெளியூர் சென்று வருகிறோம் என கூறி ஆத்திரத்தில் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் இறங்கினர்.
பின்னர், ஒன்றரை மணி நேரம் போராட்டத்துக்குப் பின் வேறு வழியின்றி ஓட்டுநர் பேருந்தை ஊருக்குள் செலுத்தி, பின் அந்த வழியாக தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஊர்மக்களுக்கும், தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.