புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம். இவர் வரும் 14-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இஸ்ரோவின் தலைவராக தற்போது உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தற்போது இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. இவர் ஜனவரி 14ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் இந்த நாராயணன்?
வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் (LPSC) இயக்குநராக செயல்பட்டு வருகிறார், இந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதியில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை விண்வெளித்துறையின் செயலாளராகவும், இஸ்ரோவின் தலைவராகவும் செயல்படுவார்.
வி.நாராயணன் விண்வெளித்துறையில் ஏறக்குறைய 40 வருட அனுபவத்தைக் கொண்டவர் மற்றும் இந்திய விண்வெளி அமைப்பில் பல முக்கிய பங்குகளை வகித்துள்ளார். தற்போது, இஸ்ரோவின் 11வது தலைவராக நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து 3-வது இஸ்ரோ தலைவர்
இஸ்ரோவின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் நாயர் (செப்.1, 2003 – அக்.29, 2009), கே.சிவன் (ஜன.15, 2018 – ஜன.14, 2022) ஆகியோர் இஸ்ரோவில் தலைவர்களாக பதவி வகித்தனர். அதன் பின்னர் இஸ்ரோவின் தலைவராக மேலும் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட 3 தமிழர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானி to தலைவர்
1984-ல் இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். GSLV Mk Ill C25 (Cryogenic Project) திட்டத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டார். ஜிஎஸ்எல்வி Mk III வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்.
ஆரம்ப கட்டத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) உள்ள சாலிட் ப்ராபல்ஷன் பகுதியில் சவுண்டிங் ராக்கெட்டுகள் மற்றும் ஆக்மென்டட் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (ASLV) மற்றும் போலார் சாட்டிலைட் ஏவுகணை வாகனம் (PSLV) ஆகியவற்றில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார். 1989-ல் காரக்பூர் ஐஐடி-யில் எம்.டெக் கிரையோஜெனிக் இன்ஜினியரிங் (M.Tech Cryogenic Engineering) பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.