நீலகிரியில் தொடர் கனமழை; மின் தடையால் இருளில் மூழ்கிய கிராமங்கள்!
Published : Oct 16, 2024, 6:11 PM IST
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குன்னூர், கோத்தகிரி, உதகமண்டலம் போன்ற பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் மரங்கள் சரிந்து விழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மின் கம்பங்கள் சரிவதாலும் மின் தடை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெலிங்டன் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக, சாலைகளில் சரிந்த மரங்களை அகற்றும் பணியிலும், மின் கம்பங்களை சரி செய்யும் பணியிலும் மின்சாரத் துறை ஊழியர்களும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக கண்டோன்மெண்ட் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்துள்ள மரங்களையும், மின் கம்பங்களையும் சரி செய்யும் பணியில் குன்னூர் தீயணைப்புத் துறையினரும், மின்சாரத் துறை ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவசர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 0423-2450034, 0423-2450035, 9943126000 என்ற எண்களை தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், ஆபத்தான பகுதியில் உள்ளவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று தங்கிக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.