சென்னை: தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியாவின் 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் நிறைவுபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஒடிசா அணியும், ஹரியானா அணி பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பட்டம் வென்ற ஒடிசா அணியினருக்கு துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
இதே போல் 2 ஆம் இடம் பிடித்த ஹரியானா அணிக்கும், 3ஆம் இடம் பிடித்த உத்தரப்பிரதேச அணிக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன் கூறுகையில்," இந்த 14ஆவது சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் 9 ஒலிபியன்கள், 40 சர்வதேச வீரர்கள் பங்கேற்றார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வுக்குழுவினரும் வந்திருந்தார்கள். இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்ற பின் பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுக்களும் வளர்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இதையும் படிங்க: உலக சாதனை படைத்த சஞ்சு - திலக் ஜோடி! ஆனாலும் ஜப்பான், ஜிம்பாப்வேயை முந்த முடியல!
தமிழ்நாட்டு அணியில் விளையாடிய கார்த்திக் அடுத்து வரவிருக்கும் உலகக் கோப்பைக்கும், ஒலிம்பிக்கிருக்கும் தகுதி பெற வாய்ப்புகள் உள்ளது. தமிழக அணியிலிருந்து கார்த்தி இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அடுத்து நடைபெறும் ஐரோப்பிய உடனான போட்டியிலும் சென்று விளையாட உள்ளார்.
அதேபோன்று தமிழக ஜூனியர் அணியில் உள்ள ஆனந்தும் சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்து அவர் சீனியர் அணியில் விளையாடி இந்திய அணிக்குத் தகுதி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. 2028 ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியில் விளையாட 2 தமிழ்நாடு வீரர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக்கிற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் அணியை தேர்வுக்குழுவும், பயிற்சியாளர்களும் கட்டமைப்பார்கள்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்