சென்னை : சென்னையில் இருந்து இன்று பகல் 11.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானம் வழக்கமாக காலை 10.25 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து விட்டு அதன் பின்பு மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால், சிங்கப்பூரில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து பகல் 11.55க்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் சுமார் 7 மணி நேரம் தாமதமாக இன்றிரவு 7 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் இன்று 142 பயணிகள் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர்.
அந்தப் பயணிகள் அனைவருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பி விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த குறுஞ்செய்தி கிடைக்காத பயணிகள் பலர் சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்கு இன்று காலை 10 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் விமானம் தாமதமாக புறப்படுவதால் நீங்கள் மாலை 4 மணிக்கு மேல் வந்தால் போதுமானது என்று கூறி உள்ளனர்.
இதையும் படிங்க : மதுரை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் போராட்டம்!
ஆனால் பயணிகள் பலர் நாங்கள் வெளியூர்களில் இருந்து வருகிறோம் இங்கு எங்கு செல்வோம்? என்று கூறிவிட்டு சர்வதேச விமான நிலைய வெளிப்பகுதியில் ஆங்காங்கே காத்திருந்தனர். அதன் பின்பு ஏர் இந்தியா பயணிகள் விமானம் பழுது பார்க்கப்பட்டு சுமார் 7:30 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 5.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.
அதன்பின்பு சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே வந்து பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. இதனால் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த 142 பயணிகள் பல மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்