சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த கடல் ஆமைகளின் பிரேத பரிசோதனைக்கு பின் அவற்றின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் வரையான கடற்கரைப் பகுதிகளில் அரியவகை கடல் ஆமைகள் அண்மையில் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கியன. இதுகுறித்து நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு, கடல் ஆமைகள் ஏன் உயிரிழந்து என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜன.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உயிரிழந்த ஆமைகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. வேறு ஆமைகள் ஏதும் உயிரிழக்கவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின் ஆமைகளின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். அதனால், அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, ஆமைகள் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.