சென்னை: மகா சிவராத்திரியை (Maha Shivratri 2025) முன்னிட்டு, ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (TNSTC) அறிவித்துள்ளது.
மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்ரவரி 26 இரவு 12 மணிக்கு தொடங்கி, மறுநாள் நள்ளிரவு 12 மணி நடைபெறும். இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளது. அப்போது, இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
தமிழ்நாட்டில் பண்டிகைக் காலங்களில் பொதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் அந்த வகையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "மிகவும் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரூவிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈஷா மகா சிவராத்திரி விழாவில் அமித் ஷா பங்கேற்பு; முன்பதிவின்றி வருவோருக்கும் ஏற்பாடு!
அந்த வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை - பெங்களூரிலிருந்து பல்வேறு இடங்களுக்கும், ஜனவரி 26ஆம் தேதி அன்று மேற்கண்ட இடங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளவும்" என இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.