திருச்சி: திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளங்கோவன் குப்புசாமி என்பவரின் மகன் ஹரி கிருஷ்ணன். இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருச்சியில் இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.
மணமகன் ஹரி கிருஷ்ணன் திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் அமெரிக்காவில் உடன் பணிபுரிந்து வந்த அமெரிக்க பெண்ணான சனம் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
பின் அவர்களது காதல் குறித்து இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர்கள் இருவரின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமணம் ஏற்பாடுகளுக்குத் தயாரான நிலையில் மணமகன் ஹரி கிருஷ்ணனின் சொந்த ஊரான திருச்சி ஶ்ரீரங்கத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று திருச்சி ஶ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் முறைப்படி உற்றார், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பெண் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட மெக்சிகோவைச் சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர் டேனியால் மைக்கேல் - ஆந்திரியா தம்பதியர் கூறுகையில், “இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவில் இருந்து நாங்கள் வந்துள்ளோம். தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள். இந்த திருமணத்தில் கலந்து கொண்டது புதிய அனுபவத்தைத் தந்துள்ளது. எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓவியக் கண்காட்சி: தஞ்சை ஆட்சியருக்கு 'Surprise Gift' அளித்த மாணவி!
இதுகுறித்து மணமகன் குடும்ப உறவினர் நல்லசேகர் கூறுகையில், “மணமகன் ஹரிகிருஷ்ணன் தந்தை இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று படித்து பட்டம் பெற்று அமெரிக்காவில் தொழிலதிபர் ஆனார். அவரது மகன் இன்று தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர் முறைப்படி திருமண செய்து கொள்ளுவது சந்தோஷமாக உள்ளது. கூகுள் (Google) நிறுவனத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளரின் மகளை ஹரி திருமணம் செய்துள்ளார். இந்த காதல் திருமணம் சிறப்பாக இருக்க வேண்டும். இருவரும் காலமெல்லாம் அன்புடன் இருக்க வேண்டும்.” என்று அவர் வாழ்த்தினார்.