தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகர் தாராசுரம் மல்லுக தெருவில், வெங்கடேஸ்வரன் (35) என்பவர் நீண்ட காலமாக பாத்திர பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி அதிகாலை இவரது பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வெங்கடேஸ்வரன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் உதவி ஆய்வாளர் சுபாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ் உள்ளிட்ட காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த அபாஸ் (எ) மாணிக்கம் (25) மற்றும் தஞ்சை பாலாஜி நகரைச் சேர்ந்த கார்த்திக் (23) ஆகிய இருவரும் என தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை இன்று நண்பகல் கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.60 ஆயிரமும், மோட்டார் சைக்கிள், ஹெல்மெட் மற்றும் இரு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : ராஜபாளையத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரிக்கச் சென்ற இரு காவலர்களை தாக்கிய கும்பல்.. 7 பேர் அதிரடி கைது!
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் திருடிய பணத்தை வைத்துக் கொண்டு கொடைக்கானல் சென்று உல்லாசமாக செலவழித்து விட்டு மீண்டும் ஊர் திரும்பும் போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
கைது செய்யப்பட்ட அபாஸ் (எ) மாணிக்கம் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மற்றொரு குற்றம் சுமத்தப்பட்ட நபரான கார்த்திக் மீது ஆயுத சட்டத்தின் கீழ் தஞ்சை பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்