சென்னை: தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவசரகால ஊர்தி சேவைகளை மேலும் செம்மையாகச் செயல்படுத்தும் வகையில், 72 புதிய "108" அவசரகால ஊர்திகள், மலை மற்றும் நிலப்பரப்பு பகுதிகளுக்கான 4 புதிய நான்கு சக்கர அவசரகால ஊர்திகள், 31 புதிய இலவச அமரர் ஊர்திகள் மற்றும் 36 புதிய இலவச தாய்சேய் நல ஊர்திகள் என மொத்தம் ரூ.29 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரம் செலவில் 143 ஊர்திகளின் சேவைகளையும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசரகால ஊர்திகளின் சேவைகளையும் என மொத்தமாக 147 அவசரகால ஊர்திகளை நேற்று (பிப்.4) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். அவசரகால சேவைகள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்திட 4 கோடியே 70 இலட்சத்து 93 ஆயிரத்து 745 ரூபாய் செலவில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1 கோடியே 12 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசரகால ஊர்திகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் –பாளையங்கோட்டை ஆகிய ஆறு இடங்களில் உணவு பகுப்பாய்வு கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவு பகுப்பாய்வு கூடங்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட அனைத்து உணவு பகுப்பாய்வகங்களும், அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India) ஆகியவற்றால் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு உணவு பகுப்பாய்வகத்திலும் ஓர் ஆண்டிற்கு சுமார் 6000 உணவு மாதிரிகள், என ஆறு உணவு பகுப்பாய்வு கூடங்களில் மொத்தம் 36,000 உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. உணவுப்பொருள்களின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கையானது சம்மந்தப்பட்ட மாவட்ட நியமன அலுவலர்களுக்கு உரியச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு: பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு!
இளநிலை பகுப்பாய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை:
இதில், இளநிலை பகுப்பாய்வாளர்களின் பணியானது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளின் தரம் குறித்து உணவு பகுப்பாய்வு கூடங்களில் பகுப்பாய்வு செய்வதாகும். இப்பணிகளை செம்மையாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளும் வகையில், உணவு பாதுகாப்புத் துறையில் உணவு பகுப்பாய்வு கூடங்களில் காலியாகவுள்ள இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, 31 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் . நா. முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் கலந்துகொண்டனர்.