கெத்து என்ற பெயரில் மது பாட்டிலுடன் பேனர் வைத்த இளைஞர்கள்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை!
Published : Feb 12, 2024, 10:18 AM IST
திண்டுக்கல்: காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் மாசி திருவிழாவை முன்னிட்டு, இளைஞர்கள் சிலர் மது பாட்டில்களை கையில் ஏந்தியவாறும், மது கூடத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைபடத்துடன் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலானது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த பேனரை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி, தெற்கு ரத வீதி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந் திருவிழா தொடங்கியுள்ளது. திருவிழாவிற்கும், கும்பாபிஷேகத்திற்கும் வருகை தரும் பொது மக்களை வரவேற்கும் விதமாக, பல்வேறு தரப்பினர் அப்பகுதியில் பேனர்களை வைத்துள்ளனர்.
அந்த வகையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கையில் மது பாட்டில்களை வைத்துக் கொண்டு மதுக்கூடத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்துடன், "திருந்தி வாழும் அளவிற்கு நாங்கள் கெட்டுப் போக இல்லை, அடுத்தவருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நாங்கள் நல்லவர்களும் இல்லை" என்ற வாசகத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல்துறையினர், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்ட இளைஞர்களின் பேனரை மட்டும் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.