பெரம்பலூர் கள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு; களத்தில் முரண்டு பிடித்த காளைகள்! - கள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு
Published : Feb 29, 2024, 6:54 PM IST
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இக்கிராமத்தில் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்றும் வெகுவிமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மாடுகளை பிடிப்பதற்காக சுமார் 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். ஜல்லிக்கட்டு காளைகள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வாடிவாசலில் அழித்து விடப்பட்டது. அதேபோல், மாடுபிடி வீரர்களும் மருத்துவ சோதனைக்குப் பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள், களத்தில் நின்று களமாடியது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டைக் கண்டு ரசித்தனர். மேலும், எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.