சட்டையைத் திருப்பி அணிந்து மழை வேண்டி தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்! - Muslims special prayer for rain
Published : Apr 28, 2024, 3:40 PM IST
திருப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (ஏப்.28) நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று மழை வேண்டி தங்களது ஆடைகளை திருப்பி போட்டுக் கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைய, மழை வேண்டி திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சிப் பள்ளியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்த தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். வழக்கமாக பிரார்த்தனையின் போது, கைகள் வானத்தை பார்த்து இருக்கும்படி பிரார்த்தனை செய்யும் நிலையில், மழை வேண்டி நடந்த இந்த பிரார்த்தனையில் கைகளை பூமியைப் பார்த்து நீட்டி தொழுகை நடத்தப்பட்டது.
மேலும், வறட்சியால் தங்களது வாழ்க்கையே புரண்டு விட்டது என்பதை உணர்த்தும் விதமாக, தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தங்களது மேலாடைகளை திருப்பி அணிந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.