கடுமையாக உயர்ந்து வரும் கட்டுமானப் பொருட்கள் விலை! உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலுக்கும் போராட்டம்.. - Builders Association Strike
Published : Feb 28, 2024, 11:51 AM IST
தஞ்சாவூர்: கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இத்தொழில் தற்போது முடங்கி, கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப் பொருட்கள், கடந்த இரு மாதங்களில் மட்டும் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக விலை ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த விலை ஏற்றத்தைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் கும்பகோணம் மைய நிர்வாகிகள் மற்றும் மைய உறுப்பினர்கள், இன்று (பிப்.28) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், விலை உயர்வு இனி அடிக்கடி ஏற்படாமல், குறிப்பிட்ட காலம் வரை ஒரே சீராக இருக்க, தமிழக அரசு விரைந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திரண்டு, கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.