ஈரோடு: தமிழகம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடியை அடுத்த அருளவாடி, குருபருண்டி ஆகிய கிராமங்களில் அடிக்கடி யானைகள் மானாவாரி நிலங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து காட்டு யானைகளை தமிழகப் பகுதிக்குள் விரட்டுவதால் காட்டு யானைகள் கூட்டமாக இன்று (ஜன.23) இந்த பகுதையை கடந்ததாக விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.
மேலும், பகல் நேரத்தில் தரிசு நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பகலில் விவசாய பணிகளை மேற்கொள்ள அஞ்சுவதாகவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்களும், யானைகளுக்கு அஞ்சி கால்நடைகளை அப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்து செல்வதை தவிர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த காட்டு யானைகளை கர்நாடக வனத்துறையினர் விரட்டும் போது தமிழகப் பகுதியில் உள்ள எத்துக்கட்டி வனப்பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு செல்வதற்காக அருளவாடி, குருபருண்டி பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: “கிளி ஜோசியம் இல்ல, இனி எலி ஜோசியம்!” கோயிலில் எலியை வைத்து ஜோதிடம்!
மேலும் இப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை மீண்டும் இப்பகுதிக்கு வராத வண்ணம் வெகு தொலைவிற்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜீரகள்ளி வனத்துறையினரிடம் கேட்டபோது, “காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.