மதுரை: திருச்செந்தூர் கோயில் விரிவாக்க பணிகளுக்காக 100 கோடி ரூபாயை கோயில் நிதியிலிருந்து பயன்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டு பணிக்கென ரூ.100 கோடியை கோயில் நிதியிலிருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானது. பேருந்து நிலையம் கட்டுதல் போன்ற பணிகளும் இந்த நிதி பயன்பாட்டு கீழ் வருகின்றன. அரசின் பணிகளுக்காக கோயில் பணத்தை செலவிட இயலாது. ஆகவே, திருச்செந்தூர் கோயில் விரிவாக்க பணிகளுக்காக 100 கோடி ரூபாயை கோயில் நிதியிலிருந்து பயன்படுத்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இதையும் படிங்க: ஈஷா மையம் விவகாரம்: வழக்குகளின் நிலை குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு மதுரை அமர்வு உத்தரவு!
மத்திய தொல்லியல் துறை திருச்செந்தூர் கோயிலின் பல்வேறு பணிகள் தொடர்பான திட்டங்களை ஆய்வு செய்து புராதன சின்னங்களை பாதுகாத்து புனரமைக்க உத்தரவிட வேண்டும். சுப்பிரமணிய சுவாமி கோயிலை புனரமைப்பதற்காக சுற்றுச்சூழல் துறையிடம் பெறப்பட்ட அனுமதியின்படி பணிகளை மேற்கொள்ளவும், விதிமீறிய கட்டடங்களை இடித்து சரி செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, "வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலாச்சார துறையின் செயலர், இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.