சென்னை: சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘பாட்டல் ராதா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் பேசியதற்கு நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மிஷ்கினுக்கு சரமாரியாக பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.22) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் அருள்தாஸ் மேடையில் பேசும்போது, “சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ திரைப்பட நிகழ்வில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதை பார்த்து மிக வருத்தமாக உள்ளது. இயக்குநர் என்பதால் என்ன வேண்டுமானாலும் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் இடமானது மிக மதிக்கத்தக்க இடத்தில் உள்ளது. தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்திய அளவில் மிக மதிப்புடைய இடத்தில் இருக்கிறார்கள். மிஷ்கின் இப்படி பேசுவதை பார்க்கும்போது தலைகுனிவாக இருக்கிறது. அவர் பேசிய இதே மேடையில்தா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய திரை ஆளுமைகள் பேசியிருக்கிறார்கள்.
இங்கே பெண் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள். வெளியே என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது. அவ்வளவு உலக படங்கள் பார்த்திருக்கிறேன், நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்கிறீர்கள். அப்புறம் என்ன அறிவு இருக்கிறது உங்களுக்கு? குறைந்தபட்ச நாகரீகம் வேண்டும். மேடை நாகரீகம் என்பது மிகவும் முக்கியம்.
தம்பி என்று யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம். அதற்கு சம்பந்தப்பட்டவர் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். மிஷ்கின் அனைவரையும் வாடா, போடா என்று ஒருமையில் பேசி வருகிறார். மிஷ்கின் பேசும் பல மேடைகளை பார்த்து வருகிறேன். தொடர்ச்சியாக பல மேடைகளில் இதே மாதிரிதான் பேசிக் கொண்டிருக்கிறார்.
மிஷ்கின் என்ன பெரிய அப்பாடக்கரா? கிழித்து தள்ளிய Actor #Aruldoss | #Mysskin pic.twitter.com/KVz0uRtX7U
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 22, 2025
சமீபத்தில் இயக்குநர் பாலாவின் 25வது ஆண்டு விழாவிலும் கூட, பாலாவைப் பற்றி ஒருமையில் அநாகரீகமாக பேசினார். ’பாட்டல் ராதா’ பட நிகழ்விலும் இளையராஜாவை பற்றி ஒருமையில் பேசுகிறார். தமிழ் சினிமாவில் நீங்கள் என்ன பெரிய கலைஞரா? நீங்கள் ஒரு போலி அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று மேடையில் இருந்த அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித் என அனைவரும் மிகத்திறமையான மண் சார்ந்த கதைகளை மட்டும் இயக்கி வெற்றிகண்ட இயக்குநர்கள். உலக சினிமாக்களை காப்பி அடித்து ஜெயித்த போலி அறிவாளி மிஷ்கின். தமிழ் சினிமா இயக்குநர்களை பெரிதும் மதிக்கக்கூடியவன் நான். மிஷ்கின் ட்ரெண்ட்செட்டர் படம் இயக்கி ஜெயிக்கவில்லை. குத்தாட்ட பாடல்களை வைத்து தான் ஜெயித்திருக்கிறார். மற்ற முக்கிய இயக்குநர்கள் மாதிரி மண் சார்ந்த கதைகளை இயக்கி நீங்கள் வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: ”விடாமுயற்சி கதை என்னுடையது இல்லை” - உண்மையை உடைத்த மகிழ் திருமேனி!
வெளிநாட்டு படத்தின் மோகத்தில் அதன் காட்சியமைப்புகள் காப்பியடித்து ஜெயித்தவர்தான் மிஷ்கின். இனியும் அவர் பல மேடைகளில் பேசலாம், ஆனால், நாகரிகமாக பேசுங்கள். ஏற்கெனவே சினிமாவைச் சேர்ந்தவர்களை பார்க்கும் பார்வையே வேறு மாதிரி இருக்கிறது. எனவே நம்மை நாமே தாழ்த்தி வெளியே அசிங்கப்பட வேண்டாம் என நினைக்கிறேன். இது என்னுடைய மனக்குமுறல், மிஷ்கினுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டில் பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் #மிஷ்கின் அவர்கள் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்துபோன @beemji #அமீர் #வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.. https://t.co/1JGPsCgPNg
— leninbharathi (@leninbharathi1) January 21, 2025
மேலும் இயக்குநர் மிஷ்கினை கண்டித்து ’மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், ”பாட்டல் ராதா டிரெய்லர் வெளியீட்டில் பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் மிஷ்கின் அவர்கள் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்துபோன பா.ரஞ்சித், அமீர்,வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பாட்டல் ராதா’. தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள ’பாட்டல் ராதா’ திரைப்படம் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெளியாகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் நேற்று டிரெய்லர் வெளியான '2K லவ் ஸ்டோரி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.