மதுரை: 'மேலூர் பகுதியிலுள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலநூறு ஆண்டுகளாக போர்க்குணம் மிக்கவர்களாக இருந்தனர். கி.பி.17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்கள் காலத்திலேயே வரி கொடுக்காமல் அரசனுக்கு அடங்காதவர்களாக அரிட்டாபட்டி மக்கள் வாழ்ந்துள்ளனர்' என்ற தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் பேசினார்.
மதுரை கே.கே.நகரிலுள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக்கூடத்தில் சிபிஐ எம்.எல். சார்பாக, 'டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கொண்டு வரப்பட்டால் விவசாயம், சுற்றுச்சூழல், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?' என்ற தலைப்பில் அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட பொது விசாரணை இன்று நடைபெற்றது.
பாதிரிக்குடி என்றழைக்கப்பட்ட அரிட்டாபட்டி: அதில் பங்கேற்றுப் பேசிய தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், "மேலூரைச் சுற்றியுள்ள மாங்குளம், அரிட்டாபட்டி, யானைமலை, கிடாரிப்பட்டி, கீழவளவு, கருங்காலக்குடி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பல நூறு ஆண்டுகளாக போர்க்குணம் மிக்கவர்களாக வாழ்ந்தனர். இந்நிலையில் அங்கு சென்ற சமண சமயமே அவர்களை பண்படுத்தியது. அதற்கான சான்றுகள், கல்வெட்டுகள், சமணத்திருமேனிகள் என அவையெல்லாம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளன.
அப்படியொரு கல்வெட்டில்தான் அரிட்டாபட்டி மலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருப்பிணையன் மலை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் ஏழு மலைகள் அங்கே உண்டு. அண்மையில் மறைந்த சுற்றுச்சூழல் போராளி ரவிச்சந்திரன், அந்த ஏழு மலைகளையும் பாதுகாப்பதற்கு அங்குள்ள காளி தெய்வத்தின் மீது சத்தியம் செய்து, அதனை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்களோடு சமர் செய்வோம் என உறுதியெடுத்தவர். அக்குறிப்பிட்ட 'திருப்பிணையன் மலையில் பொற்கோட்டு கரணத்தார் பெயரால் அசசணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக்குடியார் ரட்சை' எனக்குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. பாதிரிக்குடி என்பது இன்றைய அரிட்டாபட்டியின் முந்தைய கால பெயராகும். " என்று சாந்தலிங்கம் பேசினார்.
மன்னருக்கே அடங்காத அரிட்டாபட்டி மண்: "அதுமட்டுமன்றி வணிகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊராகவும் அரிட்டாபட்டி திகழ்ந்துள்ளது. ஐநூற்றுவர் பெருந்தெரு என்ற பெயரில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பெருந்தெரு அவ்வூரில் இருந்துள்ளது. அதுபோன்ற ஒரு பொறுப்பை அங்குள்ள கல்வெட்டுக்கள் இன்றும் சுமந்து கொண்டுள்ளன. அதனைத்தான் இப்போது அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். ஏதாவது பங்கம் நேர்ந்தால் 'பாதிரிக்குடியார் ரட்சை', அதாவது பாதிரிக்குடியார் பாதுகாப்பார்கள் என்ற கல்வெட்டு வாசகத்திற்கு இணங்க பாதிரிக்குடியாராகிய அரிட்டாபட்டியும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அதனைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராடி வருவதை நாம் பார்க்கிறோம்.
அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கு அங்கு கிடைத்த நாயக்கர் கால செப்பேடு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. கி.பி.17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில், அந்த ஊரில் வசித்த ஒருவருக்கு செப்புப்பட்டயம் மன்னரின் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கருக்கு கட்டுப்படாத, வரி கொடாத மண்ணாக அரிட்டாபட்டி அன்றைய காலகட்டத்தில் திகழ்ந்துள்ளது. அவ்வூரைச் சேர்ந்த செட்டி தளவாய் என்ற வீரன்தான் இதற்கு காரணமாய் இருந்துள்ளான். இது மன்னருக்கு மிகுந்த அவமானமாக இருந்ததால், அவ்வப்போது ஊருக்குள் அதிரடியாகப் படையெடுத்துச் சென்று, அங்குள்ள கால்நடைகளை, சொத்துக்களை அபகரித்துச் செல்வது திருமலை நாயக்கனின் வழக்கமாக இருந்துள்ளது. எங்கிருந்து, எப்போது இந்தப் படை வருகிறது என்பது தெரியாமல் மக்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளாயினர்.
அப்போதுதான் செட்டி தளவாய், அவ்வூரின் கழிஞ்ச மலை மேல் தங்கி அங்கு இருந்தவாறே இதுபோன்ற படையெடுப்பைக் கண்காணித்து பறையடித்து எச்சரிப்பதற்காக ஒருவனை நியமிக்கின்றார். தற்போது அச்செப்பேட்டை வைத்துள்ள வேளாப்புறத்தான் என்பவரின் மூதாதைதான் அதுபோன்ற கண்காணிப்புப் பணியை மேற்கொண்டவர். நாயக்க மன்னனின் படைகள் வரும்போதெல்லாம் மக்கள் தங்கள் வீட்டு விலங்குகளை அவிழ்த்துவிட்டு, யாரும் காண முடியாத இடத்தில் பதுங்கிவிடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இதனை எவ்வாறு செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, எச்சரிக்கை செய்யும் நபர் கீழே இறங்க முடியாதவாறு மன்னனின் ஆட்கள் சூழ்ச்சி செய்துவிடுகிறார்கள். பலநாட்களாக கீழே இறங்க முடியாத அந்த நபர், உண்ண உணவும் பருகத் தண்ணீரும் இன்றி அங்கேயே மாண்டு போகிறார். பிறகு அவரது குடும்பத்தார் மன்னனிடம் முறையிட, அவர் இவர்கள் மீது இரக்கம் கொண்டு, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் நடைபெறும் திருமணம், குழந்தை பிறப்பு, இறப்பு உள்ளிட்ட எந்த நிகழ்வாயிலும் அந்தக் குடும்பத்திற்கு ஒரு பணம் வரியாகத் தர வேண்டும் என்று எழுதி அதனை தானப்பட்டயமாகக் கொடுத்துள்ளார். அதுதான் அந்த செப்பேட்டில் உள்ள செய்தி.
ஆகையால் அந்தக் காலத்திலேயே மன்னனுக்கு அடங்காத மண்ணாக அரிட்டாபட்டியும் அதன் சுற்றுப்புற கிராமங்களும் திகழ்ந்துள்ளன என்பதற்கு இந்தப் பட்டயமே சான்று. அதுபோன்றே, தற்போதும் எந்த நெருக்கடிக்கும் ஆட்படாமல் தங்களது மண்ணையும், மலையையும், சூழலையும் காப்பாற்றுவதற்காக மேலூர் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்" என்று தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் பெருமிதத்துடன் பேசினார்.
மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்த ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாக, இன்றே இத்திட்டம் தொடர்பான பொது விசாரணை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.