மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதற்கான எதிர்ப்புகளும் கிளம்பின.
மேலும், டங்ஸ்டன் திட்டத்துக்கு இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது. மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி 7ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 9ஆம் தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. ஆனாலும், திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறு வரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக, மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்றனர். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.
டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் விளக்கி கூறினர். இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாயக்கர் பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்கள் அடங்கிய டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.
மக்களுக்கான வெற்றி
இதனை அடுத்து மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, மாங்குளம் தெற்கு தெரு, கிடாரிப்பட்டி, வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் வெடி வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து டங்ஸ்டன் கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கம்பூர் செல்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பேசியவர், '' கடந்த மூன்று மாதங்களாக அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருந்தோம். அதே சமயத்தில் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தவறாது அனைவரும் பங்கேற்றனர். தங்களது வாழ்வாதாரம், பண்பாடு, ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற அச்சமும் பரிதவிப்பும் எங்களிடம் இருந்தது. இன்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் அறிவிப்பை பெரிதும் வரவேற்கிறோம். இது மக்களுக்கான வெற்றி. சாதி, மதம், கட்சிகள் கடந்து போராடிய அந்த மக்களுக்கான வெற்றியாக தான் இதனை நாங்கள் பார்க்கிறோம்'' என்றார்.
மறுபிறவி எடுத்தது போல உணர்கிறோம்: அரிட்டாபட்டியை சேர்ந்த ராமஜெயம் என்ற பெண்மணி கூறும்போது, "எங்கள் மண்ணை இழந்து விடுவோமோ என்ற கவலையில் இருந்தோம். இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று அவர் கூறினார்.
அரிட்டாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கூறும்போது, "டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து என்று இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு, கடந்த 65 நாட்களாக நாங்கள் முன்னெடுத்து வந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த அறிவிப்பால் மறுபிறவி எடுத்துள்ளது போல உணர்கிறோம்" என்றார் உணர்ச்சி பொங்க.