கோயம்புத்தூர்: மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்குகளின் நிலை குறித்து தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈஷா, தங்களுக்கு எதிரான கூட்டு சதியை சட்டப்பூர்வமாக எதிர் கொள்வோம் என்று விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஈஷா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
''ஈஷா யோக மையத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் குறித்து கோவை மாவட்ட காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததாக “பொய்யான தகவலை” கூறி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சமர்பிக்கபட்ட அறிக்கையில் அப்படிபட்ட தகவல்கள் ஏதும் இல்லை. பொய்யான தகவலை கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஈஷா மையம் விவகாரம்: வழக்குகளின் நிலை குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு மதுரை அமர்வு உத்தரவு!
ஈஷாவின் நற்பெயருக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று சில தனிநபர்கள் மற்றும் ஒரு சில அமைப்புகள் பல்வேறு வகைகளில் கடந்த 30 வருடங்களாக முயன்று வருகிறார்கள். அந்த வகையில் ஈஷாவில் இருந்து வெளியேற்றபட்டவர்களை கொண்டு மீண்டுமொரு முயற்சியை, அவர்கள் கையில் எடுத்து இருக்கிறார்கள்.
ஈஷா அறக்கட்டளையில் தன்னார்வலர்களாக இருந்த சிலரின் மீது தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் ஈஷாவிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த அவர்கள் வன்மத்துடன் திட்டமிட்டு கூட்டாக இணைந்து தவறான அவதூறு குற்றச்சாட்டுகளை கட்டமைத்து பரப்பி வந்தனர். தற்போது அதனையே காவல் துறையிலும் ஆன்லைன் வாயிலாக புகாராக அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டவை, தவறான உள்நோக்கம் கொண்டவை என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்'' என அதில் கூறப்பட்டுள்ளது.