கோட்டூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் போராட்டம்! - Kottur COUNCILLOR PROTEST - KOTTUR COUNCILLOR PROTEST
Published : Aug 17, 2024, 3:23 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதன் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று கோட்டூர் பேரூராட்சியில், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் 14 பேர், செயல் அலுவலர் ஜெசிமாபானுவைச் சந்தித்தனர்.
அப்போது, கோட்டூர் பேரூராட்சியில் டென்டரில் முறைகேடு நடைபெறுவதாகவும், வரவு செலவு கணக்குகள் சரிவர சமர்பிப்பதில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டுமென கோஷங்களிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் செயல் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதுகுறித்து 2வது வார்டு கவுன்சிலர் அஜீஸ் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பேரூராட்சியில் நடந்த கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு வழங்கினர். அதில், 70 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து, பேரூராட்சி தலைவரிடம் கேட்டால், செயல் அலுவலரிடம் கேளுங்கள் என கூறுகிறார். செயல் அலுவலரிடம் கேட்டால், தலைவரிடம் கேளுங்கள் என கூறுகிறார்.
நான்கு மாதங்களாகியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களைப் பேரூராட்சிகளுக்கு வழங்கியுள்ளார். ஆனால், இதுபோன்ற தவறுகளால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்ற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்" என்றனர்.