கோவையில் சினிமா பாணியில் காரினை வழிமறித்து கொள்ளை முயற்சி! விறுவிறு சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - Covai Car robbery video - COVAI CAR ROBBERY VIDEO
Published : Jun 16, 2024, 6:19 PM IST
கோயம்புத்தூர்: கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது 27). இவர் மடிக்கணினி உள்ளிட்ட கணினி சாதனங்களை கடந்த ஜூன் 14ஆம் தேதி பெங்களூரில் வாங்கிக் கொண்டு, நண்பர்களுடன் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் கோவை அருகே பாலதுரை பிரிவு என்ற பகுதியில் இவரது காரை 3 கார்கள் பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளன. அதில், ஒரு கார் இவர்களது காரை வழிமறித்து நிறுத்தி உள்ளது. காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் இவர்களது காரை கட்டைகளால் தாக்கி, காரில் இருந்த பொருட்களை கொள்ளை அடிக்க முயன்றனர். கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கட்டையால் உடைத்து நொறுக்கினர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர் முன்னால் நின்ற கொள்ளையர்களின் கார் கதவுகளை இடித்துவிட்டு அதிர்ஷ்டிவசமாக தப்பினார்.
இதுகுறித்து சித்திக், மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்காடு மாவட்டம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ், ரமேஷ்பாபு, விஷ்ணு மற்றும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் காரில் உள்ள டேஷ் கேமராவில் பதிவாகி இருந்த இச்சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன்.