ரயில் நிலையத்தில் தமிழ், ஆங்கிலம் தெரிந்த ஊழியரை நியமிக்க வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
Published : Feb 20, 2024, 12:12 PM IST
தூத்துக்குடி: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தமிழ், ஆங்கிலம் தெரியாத வட மாநில ஊழியர் பயணச்சீட்டு வழங்குவதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகரச் செயலாளர் சரோஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது.
தூத்துக்குடி, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தட்கல் முன்பதிவு பயணச்சீட்டு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதில், வடமாநில ரயில்வே ஊழியருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாத காரணத்தால், பொதுமக்களுக்குப் பயணச்சீட்டு வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில், தமிழ், ஆங்கிலம் தெரிந்த ஊழியரை நியமிக்க வேண்டும், இரண்டாவது நடைமேடையில் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, நகரச் செயலாளர் சரோஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி ரயில்வே நிலைய அதிகாரியிடம் மனு கொடுத்து, உடனடியாக பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும், பிரச்சனையைத் தீர்க்கவும் ரயில்வே நிர்வாகம் முன்னெடுப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.