பழனியில் கிபி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு! - செப்பேடு
Published : Feb 3, 2024, 1:47 PM IST
திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்த திருமஞ்சன பண்டாரம், சண்முகம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை, தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆய்வு செய்துள்ளார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த செப்பேடு ஆயிர வைசியர் சமூகம், தம் குடிகளின் கெதி மோட்சத்திற்காக உருவாக்கப்பட்டது. 3 கிலோ எடையும், 49 செ.மீ உயரமும், 30 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.
இந்த செப்பேடு பழனி மலை முருகனுக்கு திருமஞ்சனம், வில்வார்ச்சனை, தினசரி விளா பூஜை செய்ய வேண்டி, பழனியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த திருமஞ்சன கட்டளையை விரிவாகக் கூறுகிறது.
இச்செப்பேடு கி.பி.14ஆம் நூற்றாண்டில் (1363) சோபகிருது ஆண்டு, தை மாதம் 25ஆம் தேதி வியாழக்கிழமை தைப்பூச நாளில் பெரிய நாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது. பழனி ஸ்தானீகம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனி கவுண்டர் ஆகியோரை சாட்சியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேட்டில் 518 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரிய நாயகி அம்மன், முருகன், செவ்வந்தி பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை உருவமாக வரையப்பட்டுள்ளன. தொடர்ந்து, முருகனின் புகழ் 5 பாடல்களில் பாடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.