எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சவால் விடுத்த அதிமுக நிர்வாகி எஸ்.பவுன்ராஜ்!
Published : Feb 2, 2024, 11:51 AM IST
மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை செய்து கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து நேற்று (பிப்.1) அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாரதி தலைமையில் சின்னக்கடை வீதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பவுன்ராஜ் கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து மயிலாடுதுறையில் ஆ.ராசாவால் தரக்குறைவாக பேசிவிட முடியுமா? என் உயிரே போனாலும் பரவாயில்லை, என் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் இருந்தாலும் பரவாயில்லை. புரட்சித் தலைவரைப் பற்றி அவதூறாக பேசிய வாயைக் கிழிக்காமல் விடமாட்டேன். அதிமுக-வினர் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்தீர்களா? நாங்கள் அமைதியாகத் தான் இருப்போம், ஆனால் ஆரம்பித்தோம் என்றால் தாங்காது" என ஆவேசமாகக் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட கிளை கழக செயலாளர் மற்றும் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கண்ட பதாகைகளை ஏந்தியபடி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.