சென்னை : பேசு தமிழா பேசு நிறுவனத்தின் ஆண்டு விழாவினையொட்டி, 2024ஆம் ஆண்டிற்கான 'சனாதன பெருந்தமிழர் சங்கமம்' என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் நவ 24ஆம் தேதி தி.நகர் ஹிந்து பிரச்சார சபா சாலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், தலைவர்கள் உரையாற்றும் நிகழ்வும், விருது வழங்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆன்மீக குரு சுவாமி பிரம்மயோகனந்தா தொடங்கி வைக்க, சனாதன தர்மம் குறித்து பாடகியும், ஆன்மீக பேச்சாளருமான ஹரிகதா சிந்துஜா உரையாற்றுகிறார். மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநினிவாஸ், சனாதன போராளி என்ற தலைப்பில் ஹெச்.ராஜா குறித்து பேச உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு 'சனாதன பெருந்தமிழர் விருதும்' வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி தி.நகர் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் மாம்பலம் காவல் நிலையத்திலும் கடந்த நவ 18ம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : செந்தில் பாலாஜி மீதான பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு.. நவம்பர் 29ஆம் தேதி தடய அறிவியல் துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு!
ஆனால், அந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், அனுமதி தொடர்பாகவோ? எந்த வித பதிலையும் காவல்துறையும் அளிக்கவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், பேசு தமிழா பேசு நிறுவனத்தின் இயக்குநர் ராஜவேல் நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜராகி, சனாதன பெருந்தமிழர் சங்கமம் விருது வழங்கும் நிகழ்ச்சி பொது வெளியில் நடைபெறவில்லை. உள்ளரங்கில் தான் நடைபெற உள்ளதால் அந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உள் அரங்கில் நடைபெறும் சனாதன பெருந்தமிழர் சங்கமம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்