சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை நீக்கி விட்டதாக பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவருக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு புகுந்த கும்பல் ஒன்று காவலாளியை கொலை செய்துவிட்டு பல்வேறு முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக 2019ஆம் ஆண்டு வீடியோ வெளியிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் அளித்த சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை சிறப்பு படை கைது செய்தது.இந்த விவகாரத்தில் "பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தன்னை பற்றி கருத்து தெரிவிக்க தடை விதிக்கக்கோரியும், தனக்கு மான நஷ்டஈடாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்,"என எடப்பாடி பழனிச்சாமி 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., விவகாரம்: ஞானசேகரின் மொபைல் டேட்டாக்களை சோதனையிடும் புலனாய்வுக் குழு!
வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை நீக்குவது தொடர்பாக மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஜனவரி 03) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதி, பதில்மனுவில், வேறு ஏதேனும் கருத்துக்களை நீக்க வேண்டுமா? என்பது தொடர்பாக தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.