சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை முதல் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பொங்கல் தொகுப்புகள் வரும் 9 ஆம் தேதி விநியோகம் தொடங்கப்பட உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் இன்று ஜனவரி 03 முதல் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, இன்று ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பொங்கல் தொகுப்புடன் 2,000 ரூபாய் வழங்க வேண்டும்' - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு..!
இந்த டோக்கன்களில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி கரீம் சுபேதார் தெருவில், டோக்கன்கள் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அமுதம் நியாய விலை கடை ஊழியர் பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.