சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. எம் ஆர் கே பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை அப்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்!
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், எம்ஆர்கே பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை ஆகியவற்றை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில்,"பரம்பரை குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த கணக்கில் சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தவறானது. குற்றம் சாட்டப்பட்டஎம்ஆர்கே பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூவரையும் விடுவித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்,"என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.