புதுக்கோட்டை: கொலை செய்யப்பட்டுள்ள ஜகபர் அலி குடும்பத்திற்கு அ.தி.மு.க., துணை நிற்கும். அதே போல அரசும் அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து, தயவு தாட்சனை இன்றி வெளிப்படையான விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் தலைவருமான ஜகபர் அலி, ஜனவரி 17-ஆம் தேதி இருசக்கர வாகனத்தின் சென்ற போது, டிப்பர் லாரி மீதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அவர் திருமயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக அதிக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க போராடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், குவாரி உரிமையாளர், அவரது மகன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்று (ஜனவரி 20) திங்கட்கிழமை 4 பேரை கைதுசெய்த காவல்துறை அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க., முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனிமவள கொள்ளையை எதிர்த்ததால் கொலை? ஜகபர் அலி மரண வழக்கில் 4 பேர் கைது!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலரும், அ.தி.மு.க-வை சேர்ந்தவருமான ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவத்தில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தயவு தாட்சனை இன்றி வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க., துணை நிற்கும் என அறுதல் அளிக்கும் விதத்தில் பேசினார்.
மேலும், தமிழ்நாடு அரசு அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், நேரடி தொடர்பு மறைமுக, தொடர்பு உள்ள நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மிகச்சரியான கருத்தை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது கருத்தைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜகபர் அலி எந்த நோக்கத்திற்காக போராடினாரோ அந்த நோக்கம் நிறைவேற மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, தனது பேட்டியை நிறைவு செய்து புறப்பட்டுச் சென்றார்.