நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள படுகர் சமுதாய மக்கள் ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆண்டிற்கு ஒருமுறை அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து ஹெத்தையம்மன் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் திருவிழாவை கொண்டாடினர்.
இதில், படுகர் மக்களின் பாரம்பரிய வெண்மை நிற உடையை அணிந்து ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர், ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.
ஆறு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜெகதளா கிராமத்திற்கு அவரவர் கிராமங்களிலிருந்து நடந்தே வந்தனர். ஜெகதளா அருகே காட்டிற்குள் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு, ஹெத்தையம்மன் உருவ சிலையை, அவர்களின் பாரம்பரிய படுகர் சமுதாய பாடல்களை பாடி, நடனமாடி தோளில் சுமந்து வந்தனர்.
இதையும் படிங்க: "ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி!
அப்போது 6 கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர்களும், கோயில் பூசாரிகளும் கையில் பிரம்புகளுடன் ஊர்வலமாக ஹெத்தையம்மன் கோயிலை வந்தடைந்தனர். வழியில் ஏராளமான படுகர் சமுதாய மக்களும், பிற சமுதாய மக்களும் ஹெத்தையம்மனை வழிபட்டனர். படுகர் சமுதாய ஆண்களும், பெண்களும் நடனமாடினர். இந்த நிகழ்ச்சியில் வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து ஹெத்தையம்மன் பண்டிகையில் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா காரணமாக ஜெகதளா கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் அருவங்காடு பகுதியில் நிறுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.