வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி உருது பேசி வாக்கு சேகரிப்பு! - election campaign - ELECTION CAMPAIGN
Published : Mar 31, 2024, 11:01 PM IST
திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி இன்று (மார்ச் 31) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலைக்கிராமமான நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர் தட்டு உள்ளிட்ட மலைக்கிராம மக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது காமனூர் தட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வரப்பு வெட்டியும், நிலத்திற்கு நீர் பாய்ச்சியும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து ஆம்பூர் நகர் பகுதிகளான, பி - கஸ்பா, காதர்பேட், மோட்டுக்கொள்ளை, கிருஷ்ணாபுரம், கன்னிகாபுரம், சான்றோர்குப்பம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அதிமுக வேட்பாளருக்கு பி - கஸ்பா பகுதியில் பொதுமக்கள் மலர் தூவி கும்பகலசத்தை அளித்து வரவேற்றனர். பின்னர் ஆம்பூரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் இடங்களில் அதிமுக வேட்பாளர் பசுபதி உருது மொழியில் பேசியும் வாக்கு சேகரித்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் அதன் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.