நெல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சோகம் - Tirunelveli wall collapse accident
🎬 Watch Now: Feature Video
Published : Jan 21, 2024, 7:13 AM IST
திருநெல்வேலி: மேலப்பாளையம் அருகே கருங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். ஆறுமுகம் நேற்று (ஜன.20) வழக்கம் போல், மேலப்பாளையம் ராஜா நகர் மூன்றாவது தெருவில் நடைபெறும் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுமான பணி நடைபெற்ற வீட்டின் அருகே இருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.
இதில் ஆறுமுகம் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் ஆறுமுகம் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது காரணம் குறித்தும், இடிந்து விடும் அளவுக்கு தரம் குறைப்பாட்டுடன் சுவர் கட்டப்பட்டதா? என்பது குறித்தும், போலீசார் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.